மதில் மேல் பூனை விஜய்
வெற்றி செய்தி வருகிற வரைக்கும் மதில் மேல் பூனையாக பம்மாத்து பண்ணிக் கொண்டிருந்த விஜய், தேர்தல் முடிவுக்கு பிறகு தைரியமாக ஜெயலலிதாவை சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். இதே சந்திப்பு தேர்தலுக்கு முன் நிகழ வேண்டும் என்று பலரும் முயன்றார்கள்.
அப்போதெல்லாம் அஞ்சி ஒதுங்கிய விஜய், வெற்றி பெற்றதும் வந்து நிற்பது பெரிய சந்தர்ப்பவாதம். இதை அந்த அம்மா மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று பொரும ஆரம்பித்திருக்கிறார்கள் கோடம்பாக்கத்தில் சிலர். இதற்கிடையில் வேலாயுதம் படத்தை சன் டிவி முயல்வதாகவும், விஜய் அதை தடுப்பதாகவும் கடந்த சில தினங்களுக்கு முன் எழுதியிருந்தோம்.
இப்போது தெம்பாகிவிட்டார் விஜய். தனது முடிவை மாற்றிக் கொண்டாராம் ஆஸ்கர் ரவி. முன்னொரு காலத்தில் ஜெயா டிவிக்கு படங்கள் வாங்கி தரும் வேலையை செய்து கொண்டிருந்தார் இவர். இப்போது மீண்டும் அந்த பணியை துவங்கக் கூடும்.
நாசரின் தாராள மனசு
ஈழ தமிழர்களின் பிரச்சனையை சொல்லும் காற்றுக்கென்ன வேலி என்ற படத்தை இயக்கியவர் புகழேந்தி தங்கராஜ். தற்போது ஒரு புதிய படத்தை எடுத்து வருகிறார் இவர். இதில் சத்யராஜ் ஹீரோவாக நடித்து வருகிறார். இன்னொரு முக்கியமான கேரக்டரில் நடிக்க அழைத்தாராம் நாசரை.
கதையை கேட்ட நாசர், இதுபோன்ற கதைகளில் நடிப்பது எனக்கு பெருமை. அது மட்டுமல்ல, நீங்கள் ஈழ பிரச்சனையில் எழுதிய கட்டுரைகளையும் முழக்கங்களையும் படித்திருக்கிறேன், கேட்டிருக்கிறேன். இந்த படத்தில் நடிக்க பணம் வாங்க மாட்டேன் என்று கூறிவிட்டாராம்.
கொள்கை பற்றி பேசும் போது அதிர அதிர பேசும் சத்யராஜ், காசு விஷயத்தில் கறாராக இருப்பார் எப்போதும். நாசர் இப்படி சொன்னது அவரை வெட்கப்பட வைத்ததாம். அதற்காக? வெட்கப்பட்டதோடு அமைதியாக இருந்துவிட்டார் அவர். சம்பளத்தை திருப்பி கொடுக்க முடியாதில்லை அல்லவா?
பெப்சியில் பிரச்சனை
கடந்த சில தினங்களுக்கு முன் பெப்ஸி அமைப்பில் ஒரு புதிய அரங்கத்தை திறந்து வைத்தார் அதன் தலைவர் வி.சி.குகநாதன். அதற்கு கலைஞர் அரங்கம் என்று பெயர் வைத்ததுடன், அங்கு அவரது படத்தையும் வைத்திருந்தாராம்.
இதை கண்டித்த சங்கத்தின் செயலாளர் பெப்சி சிவா படத்தை வெளியே எடுத்து வைத்துவிட்டாராம். அந்த இடத்தை கழுவி சுத்தம் செய்தார்களாம் சிலர். இதெல்லாம் மன உளைச்சலை ஏற்படுத்தியதாம் குகநாதனுக்கு. இருந்தாலும் தேர்தல் முடிவுக்காக காத்திருந்தார் அவர். ஆனால் ரிசல்ட் மேலும் மன உளைச்சலை அதிகரித்ததுதான் கொடுமை.
உடனே தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். இவரைப் போலவே தனது தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியை விட்டு விலகிக் கொண்டார் ராம.நாராயணன். இதெல்லாம் போதாது. அத்தனை பேரும் பதவி விலக வேண்டும் என்று கொடி பிடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள் சிலர். என்ன நடக்கப் போகிறதோ?
ரஜினி வந்தால்தான்
தான் வாங்கி வெளியிட்ட மைனா, பாஸ் என்கிற பாஸ்கரன் உள்ளிட்ட மூன்று படங்களின் வெற்றி விழாவை வெகு விமரிசையாக கொண்டாட நினைத்தார் உதயநிதி ஸ்டாலின். இதற்காக நேரு விளையாட்டு அரங்கத்தையும் தேர்வு செய்து வைத்திருந்தனர்.
ஆனால் விழாவுக்கு வந்து சிறப்பிப்பதாக சொல்லியிருந்த ரஜினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு விட்டார். இதில் பயங்கர அப்செட் ஆன உதயநிதி, அவர் எப்போது வந்து மீண்டும் தேதி கொடுக்கிறாரோ. அப்போது விழாவை வைத்துக் கொள்ளலாம்.
அதுவரைக்கும் இந்த விழா பற்றிய பேச்சே வேண்டாம் என்று கூறிவிட்டாராம். ஆனால் இன்னும் ஒரு மாதமாகவாவது பெட் ரெஸ்டில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டதால் இந்த விழா சாத்தியமில்லை என்றே கூறுகிறார்கள் திரையுலகத்தில்.
சிம்பு ஃபீல் பண்ணவில்லையாம்
எல்லா படத்தையும் விடாமல் பார்த்துவிடும் சிம்பு, இன்னும் கோ படத்தை மட்டும் பார்க்கவே இல்லை. எல்லாம் வெறுப்புதான். ஆனால் நான் சொன்னது சரியா போச்சா என்று அவர் தனது நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளும் ஒரு செய்தி இதுதான்.
இந்த படத்தின் கதையை கேட்டதும், அஜ்மல் கேரக்டரை ஏன் கெட்டவனாக சித்தரிக்க வேண்டும்? அவனையும் நல்லவனாக காட்டலாமே என்றாராம் சிம்பு. அதை தொடர்ந்த இழுபறியில்தான் அப்படத்திலிருந்து விலகினார் அவர். இப்போது வரும் கோ பட விமர்சனங்களிலும் இதே கருத்தை சில பத்திரிகைகள் எழுதுகின்றன.
இதைதான் சொல்லி சொல்லி மாய்கிறாராம் அவர். இப்பவும் அந்த படம் கையை விட்டு போச்சே என்று நான் பீல் பண்ணவே இல்லை என்கிறாராம் அவர். எது எப்படியோ? என் படமும் ஹிட்டுதான் என்று வெளியில் காட்டிக் கொள்வதற்காக லட்சக்கணக்கில் செலவு செய்து பார்ட்டி கொடுத்திருக்கிறார் சிம்பு. ஆனால் நிஜம் அதுவல்ல என்கிறார்கள் தியேட்டர்காரர்கள்.
0 comments:
Post a Comment